விவசாயிகளுக்கு இந்த அளவிலேனும் உதவும் இந்திய பிரதமர்!





காகங்களை விரட்டும் பிரதமர்!

கர்நாடகாவில் லக்காவளி கிராமத்தில் விவசாயிகள் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவின் கட்அவுட்களை விவசாயத்திற்கு வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றனர். கட்அவுட்டுகளால் என்ன யூஸ்? பயிர்களை மேயும் காகங்களை விரட்டவே அகில இந்திய தலைவர்களின் கட்அவுட்டுகள் உதவி வருகின்றன என்பதுதான் விசேஷம்.

கர்நாடகாவில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றும் ஆட்சியமைக்க முடியாத பாஜக, தற்போது கட்அவுட் மூலம் விவசாயிகளுக்கு காகங்களை விரட்ட உதவிவருகிறது."வயலில் காகம் விரட்டுவதற்கு தலைவர்களின் கட்அவுட்டுகளை பயன்படுத்துவதற்கு கட்சிகள் மறுப்பு தெரிவிக்கவில்லை. இது அவர்களுக்கு ஒருவகையில் விளம்பரம்தான்" என்கிறார் தரிகரே பகுதியைச் சேர்ந்த விவசாய உபகரண விற்பனையாளர் ராஜேஷ் மடபட்டி. காகங்களை விரட்டவாச்சும்  பிரதமர் உதவுகிறாரே!

கோவாவில் கிடுக்குப்பிடி!

கோவா மாநில அரசின் புதிய அபராத ரூல்ஸ், ரிலாக்ஸாக கோவாவுக்கு வரும் டூரிஸ்டுகளின் ஜாலி மூடை காலி செய்திருக்கிறது. ஆகஸ்ட் 15 முதல் கோவாவின் பொதுஇடங்களில் நீங்கள் மதுக்கோப்பையை கையில் எடுத்தால் லம்ப்பாக ஃபைன் கட்டவேண்டி வரும்.

மலிவு விலை மதுவுக்கும், பாரின் பிகினி பெண்களைக் காணவும் ஆசைப்பட்டு அடித்துபிடித்து வரும் இந்தியர்களின் பாடு இனி கஷ்டம்தான். மதுவுக்கும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும் இனி ஸ்ட்ரிக்ட்டான அபராத தொகை ரூ.100-2500 வரை விதிக்க முதல்வர் பாரிக்கர் யோசித்து வருகிறார். "மாநிலத்தின் சுற்றுச்சூழலைக் காப்பது மக்களின் பொறுப்பு. பொது இடங்களில் மது அருந்துபவர்களுக்கும், பிளாஸ்டிக் குப்பைகளை போடுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது" என ஒரே போடாக போட்டுவிட்டார்.

கோவாவின் மண்டோவி ஆற்றில் பூக்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றி கடவுளுக்கு அர்ப்பணிக்கும் எண்ணிக்கை கூடுவதால் அக்குப்பைகளை அகற்றுவது அரசுக்கு பெரும் சுமையாகி வருகிறது. ஃபைன் நடவடிக்கையால் இனி இத்தகைய ஆன்மிக கிறுக்குத்தனங்கள் குறையும் என கோவா அரசு எதிர்பார்க்கிறது


3

13 அடி நீளமான பைக்!

பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் பதிமூன்று அடியில் காரைவிட நீ...ளமான பைக்கை உருவாக்கியுள்ளார். தற்போது இதுவே உலகின் நீளமான பைக்.

7.5 லட்ச ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த பைக்கை பெங்களூருவைச் சேர்ந்த உள் அலங்கார வடிவமைப்பாளரான ஜாகிர்கான் உருவாக்கியுள்ளார்." 220 சிசி சக்தி கொண்ட இந்த பைக்கை உருவாக்க 45 நாட்கள் பிடித்தது. டாப் ஸபீடு மணிக்கு 120 கி.மீ" என பைக்கை பெருமிதமாக அறிமுகப்படுத்துகிறார் ஜாகிர். மினிட்ரக்கின் டயர்களை இந்த பைக்கின் பின் சக்கரத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். பெங்களூரு கோஸ்ட்ரைடர்!   


4

உடைந்த சாலைகளுக்கு பலி!

பராமரிக்கப்படாத உடைந்த சாலைகளால் 2017 ஆம் ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் 3 ஆயிரத்து 597 பேர் பலியாகியுள்ளனர். தோராயமாக தினசரி பத்து பேர் சாலைகளில் மரணித்துள்ளனர்.

கடந்தாண்டு தீவிரவாத தாக்குதல்களால் 803 பேர் பலியாகியுள்ள நிலையில் மோசமான சாலைகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை பலிவாங்கியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சாலைப்பணிகளில் லஞ்சம், மூலப்பொருட்களின் தரமின்மை, சாலைவிதிகளை கடைபிடிக்காததும் முக்கியக்காரணம். சாலைவிபத்துகளில் உத்தரப்பிரதேசம்(987) அடுத்தடுத்த இடங்களில் ஹரியானா, குஜராத் ஆகியவை இடம்பிடித்துள்ளன. "சாலைகளை சரியானபடி வடிவமைக்காத அதிகாரிகளின்மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் இறந்தவர்களின் உயிருக்கு விலையாக 2 லட்சம் முதல் 5 லட்சம் நஷ்ட ஈடு கொடுப்பது எப்படி?" என கேள்வி எழுப்புகிறார் பாதுகாப்பு ஆலோசகர் ரோஹித் பலுஜா






   

பிரபலமான இடுகைகள்