3டி எலும்புகள் வநதாச்சு!
3-D யில் உருவாகும் எலும்புகள்!
- ச.அன்பரசு
எண்பதுகளில் 3டி பிரிண்டர்
அறிமுகமானபோது, அதைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்ற சார்லஸ்
ஹஸ் கூட அதன் வளர்ச்சி இவ்வளவு வேகமாக அப்டேட் ஆகும் என நினைத்திருக்க மாட்டார்.
இன்று 3டி டிசைனில் உங்களுக்கு
என்ன வேண்டும்? தங்கம், வெள்ளி,
பீங்கான், துப்பாக்கி,வீடுகள்,மெழுகுப்பொருட்கள் என பொருட்களின் லிஸ்ட் வளர்ந்து மனிதர்களின் உறுப்புமாற்று
சிகிச்சைக்கு உறுப்புகளை டிசைன் செய்து பொருத்துமளவு வளர்ந்துவிட்டது. கடந்தாண்டு ஹரியானாவின் குருகிராமில் முதல் 3டி உறுப்புமாற்று
சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, இவ்வாண்டிலும் அச்சிகிச்சை கென்யநாட்டைச்
சேர்ந்தவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு தனியார் டிவிசேனல் செய்த ஆய்வில்,
இந்தியாவில் ஆண்டுதோறும் சரியான உறுப்புகள் கிடைக்காமல் 5 லட்சம் பேர் மரணித்துவருவதும், இரண்டு லட்சம் பேருக்கு
மாற்று கல்லீரலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம்
பேருக்கு சிறுநீரகமும் அவசரத்தேவை என்பது தெரிய வந்துள்ளது. தானப்பட்டியலில்
வரிசைப்படி காத்திருக்க நேர்ந்தும் பொருத்தமான உறுப்புகள் கிடைக்காமல் நோயாளிகள் பலரும்
இறக்கும் அவலமும் நிகழ்கிறது. கல்லீரல், சிறுநீரகம், இதயம் ஆகியவற்றை 3டி
பிரிண்டர் மூலம் ஒருவரின் செல்களை வைத்தே உருவாக்குவதால் இச்சிகிச்சையின் வெற்றிவாய்ப்பு
அதிகம். தற்போது சிறிய உறுப்புகளை மட்டுமே 3டியில் உருவாக்கி வருகிறார்கள். சிக்கலான உறுப்புகளான
இதயம் போன்றவற்றை 3டியில் உருவாக்க சில ஆண்டுகள் தேவைப்படலாம்.
ஹரியானாவிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தாடையை
உயர்த்திப்பிடித்தபடி வந்த இந்தி பேராசிரியைக்கு பெண்மணிக்கு கடும் கழுத்துவலி. ஒன்பது மாதங்களாக தூங்காமல் தடுமாறிய பெண்மணியை ஆராய்ந்தால் கழுத்தில் உள்ள
முள்ளெலும்புகள் காசநோய் பாதிப்பில் சிதைந்து காணாமல் போயிருந்தன. "குழந்தையின்மைக்காக பல்வேறு மருத்துவர்கள் பரிந்துரைத்த ஸ்ட்டெராய்டு மாத்திரைகள்தான்
முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு காரணம். எங்களிடம் பேராசிரியை
வந்தபோது முதுகெலும்புக்கும் கழுத்துக்கும் தொடர்பேயில்லை" என்கிறார் எலும்பு வல்லுநரான மருத்துவர் நாயக்.
கடுமையான கழுத்துவலியால் இரவுகளில் அலறித்துடித்த
பேராசிரியைக்கு இறுதியாக தீர்வு கிடைத்தது டைட்டானியம் உலோகத்தில் மூன்று செ.மீ அளவில் செய்த 3டி முள்ளெலும்புகள் மூலம்தான்.
இதனை டெல்லியிலுள்ள சஞ்சய்குமார் பதக், மருத்துவர்
பதக்கின் வழிகாட்டுதலில் தயாரித்து அளித்தார். ஸ்வீடன் மற்றும்
பிரான்ஸ் நாட்டிற்கு தேவையான டைட்டானிய உறுப்புகளை உருவாக்கித்தரும் பதக்,
2015 ஆம் ஆண்டு மும்பையில் 3டி பிரிண்டிங் தொடர்பான
மாநாடு ஒன்றில் கலந்துகொண்டார்."புதிய மாற்று உறுப்பு டெக்னாலஜியை
மருத்துவர்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிவேன். 3டியில் மருத்துவ
உபகரணங்களை தயாரிப்பது சிரமம்தான்; முடியாத ஒன்றல்ல என்பதால்
முயற்சித்தேன்" என்கிறார் பதக்.
வெளிநாட்டில்
50-60 லட்சம் மதிப்பிலான 3டி உறுப்புகளை இந்தியாவில்
1.5 லட்சம்-5 லட்சம் வரையிலான விலையில் அளிக்கிறார்.
இதில் துப்பாக்கியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மண்டையோட்டை முழுமையாக
3டியில் உருவாக்கி சேதமடைந்த பகுதியையும் உருவாக்கி தந்துள்ளது பதக்கின்
ஸ்பெஷல் சாதனை.
பேராசிரியைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குலைந்து காசநோய்
ஏற்பட்டது என்றால் கென்யாவைச் சேர்ந்த லகிதா வாங்கி என்ற ஜிம்னாஸ்டிக் சிறுமிக்கு இடதுமுழங்காலில்
எலும்பு புற்றுநோய் தந்தையின் ஜீன்சொத்தாக வந்திருந்தது. தற்போது முழங்காலில் லகிதாவுக்கு செய்துள்ள உறுப்புமாற்ற அறுவைசிகிச்சையினால்
முழங்காலை வெட்டியெடுக்காமல் தவிர்த்திருப்பதோடு நடப்பதில் வேறு சிரமம் ஏதுமில்லை.
பதக்கின் 3டி பிரிண்டிங்
நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்கள் உருவாகிவருகின்றன. இம்முறையில் உணவைக்கூட தயாரிக்க நாசா ஆராய்ச்சி செய்து வருகிறது. 3டி பிரிண்டிங் மாற்று உறுப்புகளை உடலின் நோய்எதிர்ப்பு சக்தி ஏற்றுக்கொள்ள
தயங்கினாலும், பின்னர் அது தலைகீழாக மாறியது. உடலில் செல்களிலிருந்தே உறுப்புகளை உருவாக்கத் தொடங்கி ஆய்வில் சாதித்துள்ளனர்
அமெரிக்காவின் நார்த் கரோலினாவிலுள்ள வேக் ஃபாரஸ்ட் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
"லகிதாவுக்கு வளரிளம் பருவம் என்பதால் ஆறுமாதத்திற்கு ஒருமுறை முழங்காலில் எலும்புகளை
5 மி.மீ நீளத்திற்கு சீரமைத்து வளரும்படி செய்தால்தான்
உடலின் வளர்ச்சிக்கு கால்களும் சமமாக வளரும்" என்கிறார்
எலும்பு அறுவைசிகிச்சை மருத்துவர் நிஷாந்த் சோனி. புற்றுநோய்
என்றால் நோய் தாக்கிய உறுப்பை வெட்டியெறிவது என்ற எண்ணமுள்ள கென்யாவிலிருந்து லிகிதாவின்
அம்மா டெல்லிக்கு வந்ததே மகளின் கால்களை வெட்டாமல் காப்பாற்றத்தான். உறுப்புமாற்ற சிகிச்சை என்பது நோயாளிக்கு மருத்துவரின் ஆலோசனையாக இருக்கலாமே
ஒழிய இதனை வலியுறுத்தக்கூடாது. ஏனெனில் 3டி முறையில் செய்யப்படும் உறுப்புமாற்று அறுவைசிகிச்சையில் வெற்றி உள்ளதுபோல
தோல்வியும் உண்டு.
"3டி உறுப்புகளை பல்வேறு கம்பெனிகள் தயாரிப்பதால்
இதிலுள்ள தரத்தை உறுதி செய்வது யார்? என்ற கேள்வி உள்ளது"
என்கிறார் ஆஸ்டின் மெடிக்கல் பிரிண்டிங் லேபைச் சேர்ந்த ஆஸ்டின் சுவான்.
தரத்தையும் பாதுகாப்பையும் உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஆணையமும் உறுதி செய்யும் வகையில் விதிகளை
பின்னாளில் இயற்றக்கூடும். கென்யாநாட்டு சிறுமி லகிதா போன்றோருக்கு
மாற்று சிகிச்சை கிடைக்கலாம். ஆனால் வளரிளம் பருவத்தை கடந்த எலும்புகள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு தருவது 3டி முறை உறுப்புகளே என்பது
மறுக்க முடியாத உண்மை.
3டி பிரிண்டிங்!
3டி முறையில் CAD வடிவிலான
கோப்பு, பல்வேறு அடுக்குகளாக உருவாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டு
பொருள் உருவாகிறது. திரவ வடிவில் அல்லது பவுடர் வடிவிலான பாலிமரோடு
அதனை ஒட்டும் பொருளும் இணைந்திருப்பது 3டி ஸ்பெஷல். இதில் மாற்றங்களை எளிதாக உருவாக்க முடிவது இதன் பிளஸ்பாய்ண்ட். நோயாளிகளின் உடல் அமைப்பிற்கேற்ப உறுப்புகளை தயாரிக்க முடிவது 3டி பிரிண்டிங் முறை பிரபலமாக முக்கியக்காரணம். உணவு,
வீட்டுஉபயோகம், வாகன உதிரிபாகங்கள், உடல் உறுப்புகள்(எலும்பு, மூளை,பல் இம்முறையில் அதிகம் தயாரிக்கப்பட்டு
வருகின்றன.
வளர்ச்சி!
1981 ஆம் ஆண்டு ஜப்பானின் முனிசிபல் கார்ப்பரேஷனைச்
சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹைடியோ கொடாமா, பாலிமரோடு, புற ஊதாக்கதிர்களைப் பயன்படுத்தி முப்பரிமாணவடிவத்தில் இணைக்க முயற்சித்தார்.
பின்னர், 1984 ஜூலை 16 ஆண்டு
பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்களான அலெய்ன் லெ மெகாடே, ஆலிவர் டெ விட்டே,
ஜீன் கிளாட் ஆன்ட்ரே ஆகியோர் ஸ்டீரியோலித்தோகிராபி எனும் அச்சிடும்முறையைக்
கண்டறிந்து பேடன்ட்டுக்கு விண்ணப்பித்தனர். வணிகத்திற்கு உதவாது
என அதனை பிரெஞ்சு ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனமும், சிலாஸ்(CILAS)
நிறுவனமும் நிராகரித்தன. மூன்று வாரத்திற்கு பிறகு
சார்லஸ் ஹல்(3D systems Corporation) விண்ணப்பித்த பிரிண்டிங்
முறை இன்றுவரை பயன்பாட்டிலுள்ளது. போட்டோபாலிமரில் புற ஊதா லேசர்
கதிர்களை பயன்படுத்துவது இதில் தனித்துவமானது. பிறகு ஸ்காட் க்ரம்புக்கு
பிறகு 1993 ஆம் ஆண்டு எம்ஐடி, 3டி பிரிண்டிங்
என்பதை வணிகப்படுத்தி வெற்றி கண்டது.
நன்றி: குங்குமம்